Sunday, May 9, 2010

திருநாவுக்கரசர் வரலாறு

திருச்சிற்றம்பலம்
திருவவதாரம் :

திருமுனைப்பாடி நாட்டில் தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் என்னும் ஊரில் வேளாண் மரபில் குறுக்கையர் குடியில் புகழனார் மாதினியார் இருவரும் இணைந்து இல்லறம் நடத்தி வந்தனர். இவ்விருவர்க்கும் திருமகளாய்த் திலகவதியாரும், சில ஆண்டுகள் கழித்து மருணீக்கியாரும் உலகில் அலகில் கலைத்துறை தழைப்பவும் அருந்தவத்தோர் நெறிவாழவும் திருவவதாரம் செய்தனர். பெற்றோர் உரிய நாளில் மருணீக்கியாரைப் பள்ளியில் அமர்த்திக் கலைபயிலச் செய்தனர். எல்லாக் கலைகளையும் திறம்பெறக் கற்றுத்தேர்ந்தார் மருணீக்கியார். திலகவதியார்க்கு வயது பன்னிரண்டு தொடங்கி நடைபெற்றது.
பெற்றோர் தம்மகளார்க்குத் திருமணம் செய்விக்க எண்ணினர். அவ்வேளையில் குலம், குணம், ஆண்மை, அரன்பால் அன்பு, உரு, திரு ஆகியன ஒருங்கு வாய்க்கப்பெற்றவராய் விளங்கிய கலிப்பகையார் திலகவதியாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிப் பெரியோர் சிலரைப் புகழனார்பால் அனுப்பினார். கலிப்பகையாரின் பண்புகளை அறிந்து பெற்றோரும் இசைவளித்தனர். பெரியோர்கள் இம்மகிழ்வுச் செய்தியைக் கலிப்பகையார்க்கு அறிவித்தனர். திருமணம் நிகழ்வதற்குள் வடநாட்டு மன்னர் சிலரின் படை எழுச்சி காரணமாகத் தமிழ்நில மன்னன் ஒருவன் பேராற்றல் மிக்க கலிப்பகையாரைச் சேனைத் தலைவராக்கிப் படைகளுடன் வடபுலம் செல்ல விடுத்தனன். நீண்டநாள் போர் நடந்தது. இவ்வாறு கலிப் பகையார் போரில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் புகழனார் விண்ணுலகு அடைந்தார். கற்புநெறி வழுவாத அவர் தம் மனைவியாரும் சுற்ற மொடு மக்களையும் துகளாகவே நீத்துக் கணவனாருடன் சென்றார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருணீக்கியாரும் ஆற்றொணாத் துயரில் அழுந்தினர்.
இந்நிலையில், போர்மேற் சென்ற கலிப்பகையாரும் போர்க் களத்தில் பூத உடல் நீத்துப் புகழுடம்பெய்தினார். இச்செய்தியைக் கேட்டுத் திலகவதியார் திடுக்கிட்டார். `என் தந்தையும் தாயும் என்னை அவர்க்குக் கொடுக்க இசைந்தார்கள். அந்த வகையால் அவர்க்கே நான் உரியவள்; ஆகையால் இந்த உயிரை அவர் உயிரோடு இசைவிப் பேன்` என்று கூறி உயிர்விடத் துணிந்தார். மருணீக்கியார் தமக்கையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப் புலம்பினார். `தந்தையாரை இழந்த பின் தங்களை வணங்கப் பெறுதலால் யான் இதுகாறும் உயிர் தரித்திருக் கிறேன். இந்நிலையில் என்னைக் கைவிட்டுத் தாங்கள் பிரிவீராயின் தங்களுக்கு முன் நான் உயிர் துறப்பேன்` என்று உறுதி மொழிந்தார்.

தமக்கையார் தவநிலை :
தம்பியின் மனக்கலக்கம் திலகவதியாரின் மனத்தை மாற்றியது. `தம்பியார் இவ்வுலகில் உளராக வேண்டும்` என்று எண்ணித் தம் முடிவை மாற்றிக்கொண்டார். அம்பொன்மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி மனையின்கண் இருந்து மாதவம் பெருக்கி மருணீக்கியாரைப் பேணி வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டார். மருணீக்கியாரும் துயர் நீங்கி மகிழ்வுற்றார். வயது ஏற ஏற உலகியல் அறிவும் நன்கு வாய்க்கப்பெற்றார். உலகின் நிலை யாமையை எண்ணி அறப்பணி மேற்கொண்டு அறச்சாலை, தண்ணீர்ப் பந்தர், சோலை, குளம் முதலிய அமைத்தார். வருந்தி வந்தோர்க்கு வேண்டியன ஈந்தார்; விருந்துபுரந்தந்தார். புலவரைப் போற்றினார். சமயங்களின் நன்னெறியினைத் தெரிந்துணர்தற்கு எண்ணினார். சிவபெருமானருள் செய்யாமையால் கொல்லாமை என்னும் நல்லறப் போர்வையில் உலவிய சமண சமயத்தைச் சார்ந்திட எண்ணினார்.

தருமசேனராதல் :
அக்காலத்தில் சமணம் மேலோங்கியிருந்தது. சமண முனிவர்கள் பாடலிபுத்திரம் போன்ற பகுதிகளில் தங்கித் தம் மதம் பரப்பிவந்தனர். பள்ளிகளும் பாழிகளும் அமைத்துக் கொண்டு பல்லவமன்னன் மகேந்திரவர்மன் ஆதரவில் சமண சமயத்தினைப் பரவச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மருணீக்கியார் பாடலி புத்திரம் வந்தார். சமணரின் பள்ளியைச் சார்ந்தார். சமண முனிவரும் தங்கள் தர்க்கவாதத் திறமையால் தங்கள் சமயமே மெய்ச்சமயம் என்று கூறி அவர் அறிவைமருட்டித் தங்கள் மதத்தில் ஈடுபடுத்தினர். மருள் நீக்கியாரும் அம்மத நூல்களில் வல்லவரானார். அதுகண்ட சமணரும் `தருமசேனர்` என்னும் சிறப்புப் பெயர் அளித்து அவரைப் பாராட்டி னர். தருமசேனராகிய மருணீக்கியாரும் புத்தருள் தேரரை வாதில் வென்று சமண் சமயத் தலைவராய் விளங்கிவந்தார்.

சூலை மடுத்து ஆட்கொள்ளல் :
மனையில் இருந்து தவம்பெருக்கிவந்த திலகவதியார், தம்பி புறச்சமயம் சார்ந்த செய்தி கேட்டு மனம் புழுங்கினார். சுற்றத் தொடர்புவிட்டுத் தூயசிவ நன்னெறி சார்ந்து பெருமான் திருவருள் பெற விரும்பித் திருவதிகைவீரட்டானம் அடைந்து சிவசின்னம் அணிந்து திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், மாலை புனைதல் முதலான திருப்பணிகளை மேற்கொண்டு இறைவன் திருவருளைப் போற்றிவந்தார். தீவினைத் தொடர்பால் தம்பி, புறச்சமயம் சார்ந்ததை எண்ணி வருந்தி அதிகைப் பெருமான் திருமுன் நின்று `என்னை ஆண்டருளினீராகில் அடியேன் பின்வந்தவனைப் புறச்சமயப் படுகுழியினின்றும் எடுத்தாளவேண்டும்` என்று விண்ணப்பம் செய்து வந்தார். பெருமான் திலகவதியார் கனவில் தோன்றி `உன்னுடைய மனக்கவலையை ஒழி. உன்தம்பி முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றவன். அவனை சூலைநோய் தந்து ஆட்கொள் வோம்` என்று அருள்செய்து மறைந்தனன். அவ்வண்ணமே சூலை நோய் தருமசேனர் வயிற்றிடைச் சென்று பற்றியது.
மருணீக்கியாரைப்பற்றிய சூலை வடவைத்தீயும், வச்சிரப் படையும். நஞ்சும் கூடி வருத்தினாற்போலத் துன்பந்தந்தது. தருமசேனர் நடுங்கித் தனியறை ஒன்றில் மயங்கி விழுந்தார். சமண் சமயத்தில் தாம் கற்ற மந்திரங்களால் அந்நோயைத் தடுக்கமுயன்றும் அந்நோய் தணியாது மேலும் மேலும் முடுகிவருத்தியது. தரும சேனரின் துயர்கண்ட சமணர் நெஞ்சழிந்தனர். குண்டிகை நீரை மந்திரித்துக் குடிக்கச் செய்தனர். பீலி கொண்டு தடவினர். இயன்றன அனைத்தும் செய்து ஓய்ந்தனர். இவற்றிற்கெல்லாம் நோய் மேலும் அதிகரித்ததே ஒழியக்குறையவில்லை. `ஐயோ இனி என்செய்வது` என்று கலங்கி அமணர் அனைவரும் கைவிட்டகன்றனர்.
சூலை நோயினால் சோர்வுற்ற தருமசேனர்க்குத் தம் தமக்கையாரின் நினைவு வந்தது. தமக்கு அடிசில் அமைப்பவனை அருகில் அழைத்துத் தமக்கையாரிடம் நிலைமையைச் சொல்லி வரும்படி அனுப்பினார். அவனும் அவ்வாறே திருவதிகை வந்து நந்தவனத்திற்கு மலர்கொய்யச் செல்லும் திலகவதியாரைக் கண்டு வணங்கி `நும் முடைய தம்பியாரின் ஏவலினால் இங்கு வந்தேன்` என்றனன். அதுகேட்ட அம்மையார் `தீங்குளவோ` என வினவினார், அவனும் `சூலைநோய் உயிரைமட்டும் போக்காமல் நின்று குடரை முடக்கித் துன்புறுத்தலால் அமணரெலாம் கைவிட்டகன்றனர். இச்செய்தியைத் தங்கட்குச் சொல்லிவிட்டு இருளாகும் நேரத்திலேயே திரும்பி வருமாறு என்னை அனுப்பினார்` என்று கூறி நின்றனன். அது கேட்ட திலகவதியார், `நன்றறியா அமண்பாழி நண்ணேன்` இதை அவனிடம் சொல், என மறுமொழிகூறி அனுப்பினார். அவனும் தருமசேனரிடம் சென்று தமக்கையார் கூறியதை அறிவித்தான்.
தமக்கையார் மறுமொழி கேட்டுத் தருமசேனர் சோர்வுற்றார். இறையருள் கைகூட ``இப்புன்சமயத் தொழியாத என் துன்பம் அழியத் திலகவதியார் திருவடிகளை அடைவேன்`` என்று எண்ணினார். அவ்வளவிலேயே சிறிது நோய் குறைவதாக உணர்ந்தார். குண்டிகை, பீலி, பாய் முதலியவற்றை உதறி எறிந்து வெள்ளிய ஆடை உடுத்து உண்மைப் பணியாளன் ஒருவனைத் துணைக்கொண்டு நள்ளிரவில் சமண் பாழிகளைக் கடந்து திருவதிகையை அடைந்து திலகவதியாரின் திருவடிகளில் வீழ்ந்து `நம்குலம் செய்த நற்றவத்தின் பயன் அனையீர்! உய்ந்து கரையேறும் உபாயம் அருள்க` என வேண்டினார்.

திருநாவுக்கரசராதல் :
திலகவதியார் தம்பியை நோக்கி இறைவன் திருவடிகளை எண்ணித் தொழுது `குறிக்கோளில்லாத புறச் சமயப் படுகுழியில் விழுந்து துயருழந்தீர் எழுந்திரீர்` என மொழிய, அவ்வாறே எழுந்து தொழுத மருணீக்கியாரைப் பார்த்துத் திலகவதியார், `சூலைநோய் வருதற்குக்காரணம் இறையருளேயாகும்; தன்னைச் சரணடைந்தாரைக் காக்கும் சிவபெருமானை வணங்கிப் பணிசெய்வீராக` என்று பணித்துத் திருவதிகைத் திருக்கோயிலினுட் புகுதற்குத்தகுதி உடைய ராகும்படித் திருவைந்தெழுந்தோதித் திருவெண்ணீறளித்தனர். திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்ததென மகிழ்ந்து மருணீக்கியாரும் வாங்கித் தரித்துக்கொண்டு தமக்கு உய்யும் நெறிதரும் தமக்கையார்க்குப் பின் தாமும் புறப்பட்டார்.
மருணீக்கியாரின் அகத்திருள் நீங்குமாறு புறத்திருள் நீங்கிப் பொழுது புலர்ந்தது. திலகவதியார்தொண்டு புரியத் திருவலகு தோண்டி முதலியகொண்டு திருக்கோயிலுட் புகுந்தார். தமக்கையார் பின் சென்ற மருணீக்கியார் திருக்கோயிலினுட் சென்று வலஞ்செய்து நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இறைவன் திருவருளால் தமிழ்மாலை சாத்தும் உணர்வுவர, சூலையும் மாயையும் நீங்கும் பொருட்டுக் ``கூற்றாயினவாறு`` என்று தொடங்குந் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
திருப்பதிகம் பாடும்பொழுதே சூலைநோய் நீங்கியது. சிவ பெருமான் திருவருட்கடலில் மூழ்கித் திளைத்தார். கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகத் தம்மைப் புறச்சமய இருளிலிருந்து மீட்டருளிய சூலைநோய்க்கு நன்றி தெரிவித்துத் திருவருள் இன்பத்தில் திளைத்து நின்றார். இவ்வேளையில் யாவரும் வியப்ப வானிடை இறைவன் திருவாக்கு எழுந்தது `செந்தமிழ்ச் சொல்மலராலாகிய பாமாலை பாடிய தன்மையால் நின்பெயர் `நாவுக்கரசு` என உலகேழினும் வழங்குக` என்றெழுந்த அருள்மொழி கேட்டு `இப்பெருவாழ்வு அடைதற்குரியதோ` என வியந்து இராவணனுக்கும் அருள்செய்த இறைவனது வள்ளன்மையைப் பாடுவதையே கடமையாகக் கொண்டு அதிகைப்பெருமானை வணங்கிப் போற்றினார்.
இவ்வாறு மருணீக்கியார் இறைவன் திருவருள்பெற்றுத் திருநாவுக்கரசராகப் புறச்சமய இருள்நீக்கப் புறப்பட்டதை எண்ணி உலகம் மகிழ்ந்தது. திருநாவுக்கரசர் சிவ சின்னங்கள் அணிந்து உழவாரப்படை ஏந்தி, முக்கரணங்களாலும் பக்தி செய்ய முற்பட்டார்.
திருநாவுக்கரசர் சிவநெறி சேர்ந்தசெய்தி சமணர் செவிகட்கு எட்டியது. தம் சமயத்தை நிலைநிறுத்திவந்த தருமசேனர் `சைவம் சார்ந்து ஒருவராலும் நீக்கமுடியாத சூலைநோய் நீங்கப் பெற்றார்` என்பதை உலகம் அறியின், நம்மதம் அழியும் என்றஞ்சினர். மன்னனுக்கு இச்செய்தியை மறைத்து மொழிந்தனர். `தருமசேனர் தம் தமக்கையார் மேற்கொண்டிருக்கும் சமயத்தைச் சார விரும்பிச் சூலை நோய் வந்ததாகப் பொய்கூறிச் சைவராய் நம் மதத்தையும் கடவுளரையும் இழித்துரைக்கின்றார்` என்று பொய்ச்செய்தி சித்திரித்து மெய்யுரை போல் வேந்தனிடம் விளம்பினர்.
இத்தகைய குற்றத்திற்குத் தரப்படும் தண்டனை யாதென அவர்களையே வினவினான் அரசன். `நன்றாகத் தண்டித்து ஒறுக்கவேண்டும்` என்றனர் சமணர். மன்னவன் அமைச்சரை வரவழைத்துத் திருநாவுக்கரசரைத் தம்மிடம் அழைத்துவருமாறு அனுப்பினான். அமைச்சரும் திருநாவுக்கரசரிடம் சென்று அரசன் ஆணையை அறிவித்து நின்றார்கள். திருநாவுக்கரசர் `சிவபெரு மானுக்கே மீளா ஆளாய் அவன் திருவடிகளையே சிந்திக்கும் நாம் யார்க்கும் அடங்கிவாழும் எளிமையுடையோமல்லம். நமன் வரினும் அஞ்சோம்` என்னும் பொருள் பொதிந்த தொடக்கத்தை உடைய `நாமார்க்கும் குடியல்லோம்` என்று தொடங்கும் மறுமாற்றத் திருத் தாண்டகப் பதிகம் பாடியருளினார்.

நீற்றறை குளிர்ந்தது :
அமைச்சர் அரசதண்டத்திலிருந்து நாங்கள் உய்யுமாறு தாங்கள் எழுந்தருளவேண்டுமென வேண்டினர். திருநாவுக்கரசரும் `ஈண்டு வரும் துயர்கட்கு இறைவனுளன்` என்னும் உறுதியோடு அரசன் முன் அடைந்தார். அரசன் சமணர்களைக் கலந்தாலோசித்து நீற்றறையிலிடுமாறு அவர்கள் கூறியபடியே தண்டனை விதித்தான். அவ்வாறே. ஏவலர் சிலர் அடிகளை நீற்றறையிலிட்டுத் தாளிட்டனர். நாவுக்கரசர், பெருமான் திருவடி நிழலைத் தலைமேற்கொண்டு சிவபெருமானைத் தியானித்து இனிதே இருந்தார். வெய்ய அந்நீற்றறை நிலவொளி, தென்றல், யாழிசை தடாகம் இத்தனையும் கூடிய இள வேனிற் பருவத்து மாலைக்காலமாய் இன்பம் செய்தது. ஏழு நாட்கள் சென்றன. சமணர்கள் நீற்றறையைத் திறந்து பார்த்தனர். சிவானந்த வெள்ளத்தில் மூழ்கி அம்பலவாணரின் திருவருள் அமுதுண்டு எவ்வகை ஊனமும் இன்றி வீற்றிருந்த திருநாவுக்கரசரைக் கண்டு அதிசயித்தனர், வியந்தனர்.

நஞ்சும் அமுதாயிற்று :
பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று `நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை` என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடியோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். `எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம்` என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெருமானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று.

மதயானை பணிந்தது :
நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று `நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம்,` என்று கூறினர். மதயானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் `சுண்ணவெண் சந்தனச்சாந்தும்` என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.

கல் மிதந்தது :
யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் `இனி என்செய்வது` என்று வினவினான். `அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி` என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர்.உண்மைத் தொண்டின் உறைப்புடைய திருநாவுக்கரசர் எந்தை பிரானையே ஏத்தி இறைஞ்சுவன் என்று கூறிச் `சொற்றுணை வேதியன்` என்று தொடங்கித் திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ``ஈன்றாளுமாய்`` என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார். அத்தலத்திலேயே சிலநாள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவதிகை செல்லும் விருப்பமுடையவராய்த் திருமாணிகுழி, திருத்தினை நகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவதிகையை அடைந்தார்.
சமணர் இழைத்த துன்பங்களிலிருந்து திருவருளால் மீண்டு கடலில் கல்லே தெப்பமாகக் கரையேறிய திருநாவுக்கரசர் திருவதிகை எழுந்தருளுவது கேட்டு மக்கள் மகிழ்வோடு சிறந்த முறையில் அவரை வரவேற்றனர். ``தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் நெஞ்சும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல்மேய செவ்வாயும் உடையராய்`` திருநாவுக்கரசர் அடியார் புடைசூழ திருவதிகைத் திரு வீதியுள் புகுந்து திருக்கோயிலை அடைந்து ``வெறிவிரவு கூவிளம்`` என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சிலநாள் திரு அதிகையிலேயே தங்கி உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார்.

குணபரஈச்சரம் :
சமணர் தூண்டுதலால் தீவினை செய்த பல்லவவேந்தன் தன் பழவினைப் பாசம் நீங்கத் திருவதிகை வந்து திருநாவுக்கரசரை மன்னிப்புவேண்டிப் பணிந்தான். சைவனாக மாறினான். பாடலி புத்திரத்திலிருந்த பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் கொணர்ந்து திருவதிகையில் `குணபரஈச்சரம்` என்ற பெயரில் திருக் கோயில் எடுப்பித்தான். திருநாவுக்கரசர் சிவதல யாத்திரை செய்து திருப்பதிகம் பாடித் திருத்தொண்டு செய்ய விரும்பினார். திருவெண்ணெய் நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலான தலங்களுக்குச் சென்று திருப்பதிகம் பாடித் திருப்பெண்ணாகடம் அடைந்தார்.

இடபக்குறி சூலக்குறி பெற்றது :
திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்னும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். ``பொன்னார் திருவடிக்கு`` என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்ப மும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார். சிலநாள் தங்கி உழவாரப்பணி செய்து சுடர்க் கொழுந்தீசனைப் பாடிப் பரவினார்.பிறகு, திருநாவுக்கரசர் திருவரத்துறை, திருமுதுகுன்றம் முதலான தலங்களைத் தரிசித்து நிவாநதியின் கரைவழியாகக் கடந்து தில்லையம்பதியை அடைந்தார். தில்லையில் பறவைகளும் சிவநாம முழக்கம் செய்வது கேட்டு இன்புற்று சிவனடியார் பலரும் வரவேற்க சிவமே நிலவும் திருவீதியை அடைந்து திருக்கோயிலுக்குள் புகுந்தார். தில்லையம்பலத்தில் திருநடம் புரியும் பெருமானைப் பணிந்து தெவிட்டாத இன்பம் பெற்றார். கைகளைத் தலைமேல் குவித்து, கண்கள் ஆனந்தக்கண்ணீர் சொரிய, கரணங்கள் உருக வீழ்ந்து எழுந்து என்று வந்தாய் என்னும் எம்பெருமான்தன் திருக்குறிப்பைப் போற்றி `கருநட்ட கண்டனை`, `பத்தனாய்ப் பாடமாட்டேன்` `அன்னம்பாலிக்கும்` முதலான திருப்பதிகங்களால் பரவிப் பணிந்தார். தில்லையில் சிலநாள் தங்கித் திருவேட்களம், திருக்கழிப்பாலை முதலான தலங்களைத் தரிசித்து உழவாரப்பணி செய்து இன்புற்றார்.

சம்பந்தர் சந்திப்பு 1 :
தில்லையில் திருநாவுக்கரசர் தங்கியிருந்த பொழுது சீகாழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமையம்மை தம் திருமுலைப் பாலோடு சிவஞானங்குழைத்தூட்ட உண்டு, `இவர் எம்பெருமான்` என்று சுட்டிக்காட்டி ஏழிசை இன் தமிழ்ப்பாமாலை பாடிய திருஞான சம்பந்தரின் சிறப்பினை அடியார்கள் சொல்லக் கேட்டு, அவரது திரு வடிகளை வணங்குதற்குப் பேரவாக் கொண்டு சீகாழிக்குப் புறப் பட்டார். திருநாரையூர் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு சீகாழிக்கு விரைந்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வருகையைக் கேட்டு எதிர்கொண்டழைத்தார். திருநாவுக்கரசர் அன்புப்பெருக்கால் திருஞானசம்பந்தரை வணங்கினார். திருஞான சம்பந்தர் கைகளைப்பற்றிக்கொண்டு தாமும் வணங்கி `அப்பரே` என்று அழைக்க, நாவுக்கரசரும் `அடியேன்` என்றார். மகிழ்ச்சியால் இருவர் உள்ளமும் இணைந்து இதயங்கலந்து திருத்தோணியப்பர் தம் திருக்கோயிலை அடைந்தனர். அருட்கடல் அன்புக்கடல், சைவநெறி பெற்ற புண்ணியக் கண்கள் இரண்டு, சிவபிரானது அருளும் அன்னை அருளும், இவைகளின் இணைப்பை இவ்விருவர் கூட்டுறவு அன்பர் கட்கு நினைவுறுத்தியது. திருக்கோயிலுக்குள் சென்று அடியவர் இருவரும் பெருமானைப் பணிந்தெழுந்தனர். சம்பந்தர் அப்பர் பெருமானைப்பார்த்து `நீர் உங்கள் பெருமானைப் பாடுவீராக` என்றார். அப்பரும் ஆனந்தம் மேலிட்டுப் ``பார்கொண்டுமூடி`` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். பல நாட்கள் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரோடு உடனுறைந்து பிரியாவிடை பெற்றார். சம்பந்தரும் திருக்கோலக்கா வரை உடன்சென்று வழியனுப்பினார்.அப்பர், ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு கருப் பறியலூர், புன்கூர், நீடூர், குறுக்கை முதலிய தலங்களையும் செம்பொன் பள்ளி, மயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவாவடுதுறை, திருவிடை மருதூர் முதலிய தலங்களையும் தரிசித்துக் கொண்டு திருச்சத்தி முற்றத்திற்கு எழுந்தருளினார்.

திருவடிதீகை்ஷ :
திருச்சத்திமுற்றத்துப் பெருமானாகிய சிவக்கொழுந்தீசனைப் பணிந்து `கோவாய்முடுகி` என்று தொடங்கி `கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என்தலைமேற் சூட்டியருளுக` என்று திருவடி தீகை்ஷ செய்யுமாறு வேண்டினர். சிவக்கொழுந்தீசர் `நல்லூருக்கு வருக` என்று அருளிச் செய்தார். அவ்வருள் வாக்குக் கேட்ட அப்பர் அடிகள் மகிழ்ந்து நன்மை பெருகும் அருள் வழியே, நல்லூரை அடைந்து பெருமானை வணங்கி எழுந்தார். `நினைப்பதனை முடிக்கின்றோம்` என்று அருளி அப்பரடிகள் திருமுடிமேல் பெருமான் திருவடி சூட்டியருளினான். ``நினைந்துருகும் அடியாரை`` என்று தொடங்கி இறை அருளை வியந்து ``நனைந்தனைய திருவடி என்றலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமான்`` என்றுபாடிப் பரவி மகிழ்ந்து பலநாள் அங்குத் தங்கிச் சிவதல தரிசனங்கள் பலவும் செய்து இன்புற்றார்.

அப்பூதி அடிகள் :
நல்லூரிலிருந்து நாவுக்கரசர் விடைகொண்டு திருப்பழனம் முதலான தலங்களைத் தரிசித்துத் திங்களூரை வந்தடைந்தார். திங்களூரில் அந்தணரில் மேம்பட்ட அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்று சாலை, குளம், கிணறு, தண்ணீர்ப்பந்தல் முதலான தருமங்ளைத் திருநாவுக்கரசர் பெயரால் அமைத்தும், புதல்வர்களுக்கு அவர் பெயரையே வைத்தும் பக்தி செய் தார். இவற்றை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதிஅடிகள் திருமனையை அடைந்தார். அடியார் ஒருவர் வந்துள்ளார் என்று அப்பூதிஅடிகள் வணங்கி வரவேற்றார். திருநாவுக்கரசர் அப்பூதிஅடிகளைப் பார்த்து `நீர்செய்து வரும் அறப்பணிகளைக்கண்டும் கேட்டும் இங்கு வந்தோம். நீர்செய்த அறப்பணிகளில் நும்பேர் எழுதாது வேறொரு பேர் எழுதிய காரணம் யாது?` என்று கேட்டார். அவ்வளவில் அப்பூதி அடிகள் `திருநாவுக்கரசர் பெயரையா வேறொரு பெயர் என்றீர்! அவர் தம்பெருமையை அறியாதார் யார்? மங்கலமாம் சிவவேடத்துடன் இவ்வாறு மொழிந்தீரே நீர் யார்?` என்று வெகுண்டு கேட்டனர். திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளாரின் அன்பின் திறம் அறிந்து `இறைவன் சூலைதந்து ஆட்கொள்ள அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான்` எனப் பணிமொழி புகன்று தம்மை அறிமுகம் செய்துகொண்டார். அவ்வுரை கேட்ட அப்பூதி அடிகள் தம் குல தெய்வமே எழுந்தருளினாரென பெருமகிழ்ச்சிகொண்டு மனைவி மக்கள் உற்றார் மற்றோர் எல்லோரையும் அழைத்துவந்து வணங்கச் செய்து தாமும் வணங்கித் தம் இல்லத்தில் திருவமுது செய்தருளும்படி வேண்டினார். அப்பர் பெருமானும் அதற்கு இசைந்தருளினார்.

விடந்தீர்த்தது :
அறுசுவை அடிசில் தயாராயிற்று. தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக் குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். மூத்ததிருநாவுக்கரசும் தமக்கு இப்பணி கிடைத்ததே என்னும் பெருமகிழ்வோடு விரைந்துசென்று வாழைக்குருத்து அரியமுற்பட்டார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டியது. ஆனால் மூத்த திருநாவுக்கரசோ அதைப் பொருட்படுத்தாது திருவமுது படைத்தற்கு இடையூறு நேருமோ என்றஞ்சி ஓடிவந்து இலையைத் தாயார் கையில் கொடுத்துக் கீழே விழுந்தார். தந்தைதாயர் இருவரும் `இதனைத் திருநாவுக்கரசர் அறியின் அமுதுண்ண இசையார்` என்று எண்ணித் தன் மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகட்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார். திருநாவுக்கரசர் திருவுளத்தில் இறைவனருளால் ஒரு தடுமாற்றம் உண்டாக, மூத்த திருநாவுக்கரசை அழையும் என்றார். அப்பூதியாரோ `இப்போது அவன் இங்கு உதவான்` என்று கூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் `ஒன்றுகொலாம்` என்ற திருப்பதிகம் பாடியருளினர். உறங்கி எழுவாரைப்போல மூத்த திருநாவுக்கரசும் எழுந்து பணிந்தார். அப்பூதியாரின் வேண்டுகோளின்படி மீண்டும் அவர்தம் வீட்டிற்கு எழுந்தருளி எல்லோரையும் ஒக்க இருக்கச்செய்து அமுது செய்தருளினார். பின் சில நாட்கள் திங்களூரில் தங்கியிருந்து அப்பூதி அடிகளுடன் திருப்பழனம் சென்று பணிந்து பாடினார். அங்குப் பாடிய திருப்பதிகத்தில் அப்பூதி அடிகளின் பெருமையையும் அமைத்துப் பாடினார்.
திருப்பழனத்திலிருந்து திருநல்லூர், வலஞ்சுழி, குடமூக்கு முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூர் வந்தார். அடியார் பெருமக்கள் பலரும் எதிர்கொண்டழைத்துப் போற்றினர். திரு வாரூரில் புற்றிடங்கொண்டாரையும் தியாகேசனையும் பணிந்து ``பாடிளம் பூதத்தினானும்`` என்று தொடங்கிப் பதிகம் பாடினார். அப்பொழுது ஆரூரில் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் திருவுலாப் போந்தருளியது கண்டு வணங்கி மகிழ்ந்து திருப்புகலூர்க்குப் புறப்பட்டார்.

சம்பந்தர் சந்திப்பு 2 :
திருவாரூரிலிருந்து வழியில் பல சிவதலங்களையும் தரிசித்துக் கொண்டே திருப்புகலூருக்கு வந்தார். அப்பொழுது முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரும் அப்பரை எதிர்கொண்டழைத்தார். திருவாரூரில் நிகழ்ந்த சிறப்பினைத் திருஞானசம்பந்தர் வினவத் திருநாவுக்கரசர், ``முத்து விதானம்`` என்று தொடங்கித் திருவாதிரைச் சிறப்பை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட சம்பந்தர் `நானும் திருவாரூர் சென்று மீண்டும் உம்மோடு உடனுறைவேன்` என்று கூறித் திருவாரூர் சென்றார். திருப்புகலூரை அடைந்த திருநாவுக்கரசர் பெருமானை வணங்கிப் பாமாலைகள் பாடியும், உழவாரப்பணிசெய்தும் அங்கிருந்துகொண்டே அருகில் உள்ள சிவதலங்களையெல்லாம் சென்று தரிசித்திருந்தார். திருவாரூர் சென்ற திருஞானசம்பந்தரும் திருப்புகலூர் மீண்டார். இருவரும் முருகநாயனார் திருமடத்தில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர்.

படிக்காசு பெற்றது :
சிலநாட்கள் தங்கியிருந்து திருப்புகலூரில் நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் சிறுத்தொண்டர், நீலநக்கர், முருக நாயனார் ஆகி யோரிடம் விடைபெற்றுப் புறப்பட்டுத் திருக்கடவூர் வந்தனர். குங்குலியக்கலய நாயனார் திருமடத்தில் உபசரிக்கப் பெற்றுத் தங்கி அமுதகடேசரை வணங்கி இன்புற்று ஆக்கூர் முதலிய தலங்களைப் பணிந்து திருவீழிமிழலைக்கு வந்தனர். விண்ணிழி விமானத்தில் இருக்கும் இறைவனைப் பணிந்து பரவினர். பிறகு இருவேறு திருமடங் களில் திருவீழிமிழலையில் தங்கினார்கள். அந்நாளில் மழையின்மை யாலும் ஆற்றுநீர்ப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாயிற்று. இறைவன் ஞானசம்பந்தர் நாவுக்கரசர் கனவில் தோன்றி, `கால வேறுபாட்டால் துன்புற வேண்டாம். அடியவர்க்கு உணவளிக்கும் பொருட்டுப் படிக்காசு தருகின்றோம்` என்று கூறி திருக்கோயிலில் மேற்கு கிழக்குப் பீடங்களில் நாள்தோறும் படிக்காசு அளித்தான். அக் காசுகளைப் பெற்று `சிவனடியார்கள் இருபொழுதும் எய்தி உண்க` எனப் பறைசாற்றி அடியார்க்கு அமுதளித்தார்கள். திருநாவுக்கரசர் கைத்தொண்டு புரிவதால் அவர்க்கு வாசியில்லாக் காசும் திருஞான சம்பந்தர்க்கு வாசியுள்ள காசும் கிடைத்தன. சம்பந்தர் இறைவனைப் பாடி வாசி நீங்கப் பெற்றார். சிலகாலம் கழித்து எங்கும் மழை பெய்து வளம் பெருகியது.

மறைக்கதவம் திறப்பித்தது :
திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்ட இருவரும் திருவாஞ்சி யம் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருமறைக்காட்டை அடைந்து வலம் வந்து திருக்கோயிலை அடைந்தார்கள். பண்டை நாளில் வேதங்கள் இறைவனை வழிபட்டு அடைத்திருந்த திருவாயிற் கதவுகள் அந்நாள்முதல் திறக்கப்படாமலே இருந்தது. அவ்வூர் மக்கள் வேறொரு வழியே சென்று வழிபட்டு வந்தனர். இச்செய்தியை அறிந்த திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை நோக்கி `நாம் நேர் முகவாயில் வழியே சென்று மறைக்காட்டுறையும் பெருமானை வழிபட வேண்டும். ஆதலால் இக்கதவு திறக்கும்படிப் பதிகம் பாடியருளும்` என்று கூறினர். ஆளுடைய பிள்ளையாரின் அருள் மொழிப்படியே அப்பரும் `பண்ணினேர் மொழியாள்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார். ஞானசம்பந்தர் `சதுரம் மறை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர்.
வாய்மூரில் இறைவன் ஆடல் காட்டி அருளல்:
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி `நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக` என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலையில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார்.ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் `தளிரிள வளரென` எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர். பின்பு சம்பந்தர் தெற்கு நோக்கி பயணமாக  திருநாவுக்கரசர் வடக்கு நோக்கி பயணமானார்.


சம்பந்தர் சந்திப்பு 3 :
மதுரை விஜயத்தை முடித்துக்கொண்டு  திருக்கடவூர் சென்று வழிபட்ட சம்பந்தர் பின்பு  அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்.ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வருவாராயினார்.திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்த போது அப்பர் வரவைக் காணாது `அப்பர் எங்குற்றார்?` என அடியவர் களை வினாவினார். அவ்வுரை கேட்ட அப்பர் `உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்` என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையினின் றிறங்கி `இவ்வாறு செய்தருள்வது தகுமா?` எனக் கூறி அப்பரை வணங்கினார். அப்பரும் உடன் வணங்கினார். பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர். ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பாண்டி நாட்டில் நடந்தவைகளை விவரித்தார். அப்பர் `திருநெறித் தொண்டெனும் வான்பயிர் தழைக்கச்சூழும் பெருவேலி ஆயினீர்` எனப் போற்றினார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியதை அறிந்த அப்பர் அந்நாடுசெல்லும் விருப்புடையவரானார். அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக்கேட்ட ஞானசம்பந்தர் தொண்டை நாடு செல்லும் விருப்புடையரானார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து யாத்திரை மேற்கொண்டனர்.

பாண்டிநாட்டுத் தலயாத்திரை :
திருவாலவாய்க்குச் சென்ற திருநாவுக்கரசர்  செந்தமிழ்ச் சொக்கனையும் அங்கயற்கண்ணியையும் பாடி வணங்கினார். பாண்டியமன்னன் நெடுமாறனும் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அடிபணிந்துபோற்ற மதுரையில் சிலநாள் தங்கினார். பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருப்பூவணம் இராமேச்சுரம் நெல்லை கானப்பேர் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருப்புகலூரை அடைந்தார். நாள் தோறும் இறைவனைப் பல பதிகங்களால் பாடியும் உழவாரப்பணி செய்தும் திருப்புகலூரில் தங்கியிருந்தார்.
திருப்புகலூரில் திருவடிப்பேறு :
இறைவன் திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகிற்குக் காட்டத் திருவுளங்கொண்டான். ஆண்டஅரசு உழவாரப்பணி செய்யும் இடங்களில் பொன்னும் நவமணிகளும் கிடக்கும்படிச் செய்தான். திருநாவுக்கரசர் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இயல்பு உடையாராதலின் அவற்றை ஏனைய கற்களோடு வாரித் தடாகத்துள் எறிந்தார். அப்பரின் தூய துறவற நிலையை மேலும் உலகிற்கு விளக்க எண்ணிய இறைவன் அரம்பையர் பலரை அங்குவரச் செய்தனன். அரம்பையர் ஆடல் பாடல்களால் பல்லாற்றானும் திருநாவுக்கரசரை மயக்க முற்பட்டனர். ஒன்றினாலும் மனம் திரியாத அப்பர் அவர்களைநோக்கி `உம்மால் இங்கு எனக்கு ஆகவேண்டியகுறை யாதுளது? நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளாயினேன்` என்னும் கருத்தமைந்த `பொய்மாயப் பெருங்கடலில்` என்று தொடங்கும் திருத் தாண்டகத்திருப்பதிகத்தால் தெரிவித்தருளினர். அரம்பையரும் சோர்ந்து திருநாவுக்கரசரை வணங்கி அகன்றனர்.இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக்கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். முன்னுணர்ச்சியால் `புகலூர்ப்பெருமான் சேவடிக்கீழ்த்தம்மைப் புகலாகக்கொள்வான்` என்ற கருத்துப்பட திருவிருத்தங்கள் பலவும் பாடினார்.எல்லாவுலகமும் போற்ற ``எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ`` என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட திருநாவுக்கரசர்  ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார்.

காலக் குறிப்பு :
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அடியார்களில் சிறுத் தொண்டரும் சமகாலத்தவர் என்பது வரலாற்றால் இனிது விளங்கும் உண்மை. திருநாவுக்கரசர் முதிர்ந்தவயதிலேயே திருஞான சம்பந்தரைச் சந்தித்திருக்கவேண்டும் என்பதுதெளிவு. சம்பந்தர் நாவுக்கரசரை அப்பரே என்று அழைத்த வரலாற்றுக் குறிப்பும் இதனை வலியுறுத்தும். இவர்கள் காலங்களில் குறிக்கப்படும் மன்னர்கள் பல்லவர்களில் மகேந்திரவர்மனும், பாண்டியர்களில் நெடுமாறனும் சாளுக்கியர்களில் புலிகேசியும் ஆவர்.மகேந்திரவர்மன் கி.பி.600 முதல் 630 வரை காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தவன். சமணர் சொற்கேட்டு திருநாவுக்கரசரைத் துன்புறுத்தியவனும் பின் திருநாவுக்கரசர் பெருமையை உணர்ந்து சிவபிரான் திருவருட்பேற்றுக்குரியவனாய்க் குணபரன் என்ற தன் பெயரால் குணபரஈச்சரம் என்ற திருக் கோயிலைத் திருவதிகையில் கட்டியவனும் இம் மன்னனேயாவன். இவன் ஆட்சிக்காலம் மேலே குறித்துள்ளதாகும். சைவனாக மாறிய பிறகு சமணம் புத்தம் முதலிய மதங்களை இழித்துக் கூறியுள்ளான். தான் நிறுவிய திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயிலில் தான் சமணனாக இருந்து சைவனான நிகழ்ச்சியைக் குறித்துள்ளான். பாண்டியர்களில் திருஞானசம்பந்தரால் சைவனாக்கப்பெற்ற மன்னன் நெடுஞ்செழியன் கி.பி.640 முதல் 670 வரை ஆட்சி புரிந்தவன்.நரசிங்கவர்மனது படைத்தலைவராயிருந்து வடபுலத்திற் சென்று செய்த வாதாபிப்போரில் வெற்றி கொண்ட பரஞ்சோதியாரே சிறுத்தொண்டராவர். வாதாபிப்போர் கி.பி.642 இல் நடந்திருக்க வேண்டும். இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள இக் குறிப்புக்களைக் கொண்டு கி.பி. 574 க்கும் 655 க்கும் இடையே அப்பர் சுவாமிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கோவைகிழார் ஆராய்ந்து கூறி யுள்ளார். பழைய வெண்பா ஒன்று அப்பருக்கு வயது எண்பத்தொன்று என்று கூறுகிறது.

திருச்சிற்றம்பலம்

Friday, April 30, 2010

திரு ஞானசம்பந்தர் வரலாறு

 திருச்சிற்றம்பலம்

 
பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர். இவர் தம் அருள் வரலாற்றைப் பெரிய புராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விரித்துரைத்துள்ளார். சைவசமய ஆசாரியர்கள் நால்வரில் முதல் ஆசாரியராகவும், அறுபான் மும்மை நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்கும் இவர் வரலாற்றை முதன்முதல் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்,
                 
        வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
         மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணா
         எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

எனக் குறிப்பிட்டு அருளியதோடு, தாம் அருளிய தேவாரத் திருப் பதிகங்களிலும் திருஞானசம்பந்தர் பெருமைகளைப் போற்றிப் பாடியுள்ளார்.

திருத்தொண்டர்களின் வரலாறுகளை மேலும் விளக்கி, திருத் தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள், இரண்டு பாடல்களில் இவர் வரலாற்றை அந்நூலில் விளக்கியதோடு பதினொராம் திருமுறையில் இலங்கும் ஆறு பிரபந்தங்களில் திருஞானசம்பந்தர் வரலாற்றையும், அவர் தம் அருள் நலங்களையும், அவர் அருளிய தேவாரத் திருமுறைகளின் பெருமைகளையும் விளக்கியுள்ளார்.

இவ்வாறு மிக விரிந்த புகழாளராகிய திருஞானசம்பந்தர் அருள் வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

தோற்றம்:
சோழவள நாட்டில் பிரமபுரம் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம், கழுமலம் என்னும் பன்னிரு திருப்பெயர்களை உடைய சீகாழிப்பதியில் கவுணியர் கோத்திரத்தில் அந்தணர்குலத்தில் சிவபாத இருதயர் என்னும் வேதியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர்தம் அருமைத் துணைவியாராக அமைந்தவர் பகவதியார் எனப் பெறுவார். இருவரும் இணைந்து சிவநெறி போற்றி வாழ்ந்து வருங்காலத்தில் தமிழகத்தில் சமண புத்த சமயங்கள் தலைதூக்கி நின்றன. வேதநெறி வளர்ச்சி குன்றியிருந்தது. மக்கள் பூதி சாதனங்களைப் போற்றாது வாழத் தொடங்கினர். அவற்றைக் கண்ட சிவபாத இருதயர் பரசமயம் நிராகரித்து நீறாக்கும் மைந்தர் ஒருவரைத் தமக்குத் தந்தருளுமாறு திருத்தோணிபுரத்து இறைவனை வேண்டி வந்தார்.

திருத்தோணிபுரத்து இறைவர் திருவருளால் அன்னை பகவதியார் மணிவயிறு வாய்த்தார்கள். ஞாயிறு முதலிய கோள்கள் உச்ச நிலையில் அமைந்த நற்பொழுதில், ஒரு திருவாதிரைத் திருநாளில், சிவநெறி சிறந்து விளங்கவும், தமிழ்மக்கள் செய்த தவம் நிரம்பவும், தவநெறி தழைக்கவும், திசைகளில் தென்திசையே சிறப்பெய்தவும், செழுந்தமிழ் வழக்கு ஏனைய மொழிகளின் வழக்கை வென்று மேம்படவும். இசைத்திறன் யாண்டும் நிலைபெறவும், இறையருள் விளக்கம் எங்கும் உண்டாகவும், புறச்சமயங்கள் பொலிவிழக்கவும் சீகாழிப்பதியில், எவ்வுயிர்க்கும் சிவமாந்தன்மையை வழங்கும் ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்தருளினார். அவரது தோற்றத்தால் எவ்வுயிர்களும் மகிழ்வுற்றன. வேதவிதிப்படி பெயரிடுதல், தொட்டிலிற் கிடத்தல் முதலிய சடங்குகள் உரிய காலங்களில் நிகழ்ந்தன. பகவதி அம்மையார் இறைவன் திருவடிபரவும் பேரன்பைத் தம் திருமுலைப்பாலுடன் கூட்டி ஊட்டி அன்பான அரவணைப்பில் ஆளுடைய பிள்ளையாரை வளர்த்து வந்தார். முன்னைப் பிறப்பில் சிவபிரானை வழிபட்டுச் சிவானந்தம் நுகர்ந்து வந்த பிள்ளையார்க்கு அவனிடமிருந்து வந்த பிரிவுணர்வு அவ்வப்போது வர வெருக்கொண்டு அழும் நிலை அவர்பால் இருந்தது. இந்நிலையில் பிள்ளையாருக்கு வயது இரண்டாண்டுகள் நிரம்பின. மூன்றாவது வயதின் தளர் நடைப்பருவத்தில் பிள்ளையார் ஏனைய குழந்தைகளோடு வீதியில் விளையாடும் நிலையை எய்தினார்.

ஞானப்பால் உண்டது:
ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயிலுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட்டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து `உன் செய்கை இதுவாயின் உடன் வருக` எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார்.

இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத்தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர்ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடைதுடிப்ப `அம்மே அப்பா` என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளினார். பெருமான் உமையம்மையை நோக்கி `அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக` எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார்.

எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)    அண்ணலைஅங்கு அழுகைதீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்.

அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந்திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞானபோனகரை நோக்கிப் `பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக` என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் `தோடுடைய செவியன்` என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார். அதனைக் கேட்ட சிவபாத இருதயர் அடித்தற்கு என ஓங்கிய கோல் நெகிழ்ந்து வீழ வியப்பும் வெருட்சியும் மேலிட்டவராய் நின்றார். ஞானசம்பந்தர் தந்தையார் உடன் வர ஆலயம் சென்று பிரமபுரத்துப் பெருமானை வணங்கிப் போற்றி மீண்டார்.
இச் செய்தி நகர் முழுவதும் பரவிய நிலையில் அன்பர்கள் ஞானசம்பந்தரைப் போற்றி வரவேற்க, சிவபாத இருதயர் பிள்ளையாரைத் தம் தோள்மேல் அமர்த்திக் கொண்டு தம் இல்லம் சென்றடைந்தார்.

பொற்றாளம் பெற்றது:
உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திருநெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று `மடையில் வாளை` எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.
திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீகாழி திரும்பிய ஞானசம்பந்தர் நேரே ஆலயம் சென்று `பூவார் கொன்றை` எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் போற்றித் தம் மாளிகையை அடைந்தார்.

திருநனிபள்ளி யாத்திரை:
ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம் பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம்பந்தரை வேண்டினர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் `எதிரே தோன்றும் இப்பதியாது` எனக் கேட்கத் தந்தையார் `அது தான் நனிபள்ளி` எனச் சொல்லக் கேட்டுக் `காரைகள் கூகைமுல்லை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து வணங்கிப் போற்றி அவ்வூரின் அருகிலுள்ள தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண்காடு முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு மீண்டும் சீகாழிப் பதிக்குத் திரும்பினார். வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி, ஞானசம்பந்தர் வரவால் நெய்தலாய்ப் பின் மருதமாயிற்று. இது ஞானசம்பந்தர் வரலாற்றில் அமைந்த இரண்டாவது தல யாத்திரை யாகும்.
சில நாட்கள் கழித்து ஞானசம்பந்தர் மயேந்திரப்பள்ளி, குருகாவூர், முல்லை வாயில் முதலிய தலங்களைச் சென்று வணங்கி மீண்டார். இது மூன்றாவது தலயாத்திரை.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் தொடர்பு:
திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறை வனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப் பதியை அடைந்தனர். அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீல கண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும் பணியை மேற்கொண்டார். திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றார். தென்திசைவாயில் வழியே ஆலயத்தினுட்சென்றுபேரம்பலத்தை வணங்கிக் `கற்றாங்கு எரியோம்பி` `ஆடினாய் நறுநெய்` என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார். அத்தலத்தில் தங்குதற்கு மனமின்றி திருவேட்களத்தில் தங்கியிருந்து நாள்தோறும் தில்லைக் கூத்தனை வழிபட்டார். அங்குத் தங்கியிருக்கும் நாட்களில் திருக்கழிப்பாலை, திருநெல்வாயில் முதலிய தலங்களை வழிபட்டார்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் தில்லையின் மேற்றிசையில் வெள்ளாற்றின் கரையிலுள்ள தலங்களை வழிபட வேண்டுமென வேண்ட ஞானசம்பந்தரும் அதற்கிசைந்து புறப்பட்டார். எருக்கத்தம் புலியூரை அடைந்தவுடன் `இத்தலம் அடியேன் பிறந்த தலம்` என யாழ்ப்பாணர் கூறக்கேட்டு மகிழ்ந்து திருக்கோயிலுக்குச் சென்று பதிகம் பாடிப்பரவினார்.

முத்துச் சிவிகை, குடை, சின்னம் பெறல்:
ஞானசம்பந்தர் எருக்கத்தம் புலியூரிலிருந்து திருமுதுகுன்றம் திருபெண்ணாகடம் ஆகிய தலங்களை வணங்கிக்கொண்டு திருநெல் வாயில்அரத்துறை செல்லப் புறப்பட்டார். தந்தையார் தோள்மேல் அமர்ந்து செல்ல மனம் இன்றித்திருவடி நோக நடந்தே வருவதைக் கண்ட தந்தையாரும் அடியவர்களும் மிகவும் பரிவுற்றனர். திருநெல்வாயில் அரத்துறை அணுகிய போது மாலை நேரம் வந்தது. வழி நடந்த இளைப்பு வர ஞானசம்பந்தர் அடியவர்களோடு மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார்.
அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின் வழி நடைவருத்தத்தை அறிந்து அரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி `ஞானசம் பந்தன் நம்மைக் காண வருகின்றான். அவனுக்கென ஆலயத்துள் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள்ளோம் எடுத்துச்சென்று கொடுத்து அழைத்து வருக` எனப் பணித்தருளினான். அவ்வாறே இறைவன் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி `யாம் அளிக்கும் பொருள்களை ஏற்று வருக` எனக் கூறியருளினான். அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த அப் பொருள்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம் நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து `எந்தை ஈசன் எம்பெருமான்` என்ற திருப்பதிகத்தால்,இறையருளை வியந்து புறப்பட்டுச் சென்று அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார். திருநெல்வாயில் அரத்துறையில் சில நாள் தங்கியிருந்து புறப்பட்டுச் சிவிகையில் விசையமங்கை, திருவைகா, புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம் புலியூர், வாழ்கொளிப்புத்தூர், கடம்பூர், நாரையூர், கருப்பறியலூர், முதலிய தலங்களைப் பணிந்து திருப்பிரமபுரம் மீண்டருளினார். இது நான்காவது தலயாத்திரையாகும்.

உபநயனம்:
ஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து `மறை நான்கும் தந்தோம்` என்றனர். பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும் ஓதாது உணந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, `துஞ்சலும் துஞ்சல்` என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி யருளினார்.

அப்பர், சம்பந்தர் சந்திப்பு:
உபநயனச் சடங்கு முடிந்து ஞானசம்பந்தர் சீகாழியில் தங்கியிருக்கும் பொழுது, தில்லை வந்தருளிய திருநாவுக்கரசர் ஞான சம்பந்தரை இறைவன் ஆட்கொண்டருளிய அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரைக் காணும் பெருவேட்கையோடு சீகாழிப்பதிக்கு எழுந்தருளினார். கல்லைப் புணையாகக் கொண்டு கடலிடைக் கரையேறிய நாவுக்கரசர் பெருமைகளைக் கேட்டறிந்திருந்த ஞானசம்பந்தர் அவர் தன்னைக்காண வருகின்றார் என்பதை அறிந்து அன்பர்களோடு சென்று அவரை எதிர் கொண்டு அழைத்தனர். தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரும் நெஞ்சும் அன்பு பாய்வது போல் கண்ணீரும்கொண்டு முதியராய் வந்த திருநாவுக்கரசரை ஞானசம்பந்தர் வணங்கினார். நாவுக்கரசர் அவரை வணங்கித் தன்னை வணங்கிய ஞானசம்பந்தரைத் தம் எழுதரிய மலர்க்கையால் எடுத்து `அப்பரே` என அழைக்க அவரும் அடியேன் என மகிழ்ந்துரைத்தார். இருவரும் அளவளாவி மகிழ்ந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டனர். ஞானசம்பந்தர் அப்பரைத் தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் திருவமுது கொண்டு அளவளாவி மகிழ்ந்தனர். சிலநாள்கள் சீகாழிப் பதியில் தங்கிப் போற்றிய அப்பர் பிரியாவிடைபெற்றுச் சோழ நாட்டுத் திருத் தலங்களை வணங்கப் புறப்பட்டார்.
ஞானசம்பந்தர் சீகாழியில் தங்கியிருக்கும் நாள்களில் மொழி மாற்று, மாலைமாற்று முதலிய பல திருப்பதிகங்களைச் சித்திரகவிகளுக்குரிய இலக்கியங்களாகப் படைத்துக் காழி இறைவனைப் பாடிக் களிப்புற்றார். திருநீலகண்டயாழ்ப்பாணரும் அவர்தம் துணைவியார் மதங்கசூளாமணியாரும் அப்பதிகங்களை யாழில் இணைத்து இசைத்து வாழ்ந்து வந்தனர்.

முயலகன் நோய் தீர்த்தல்:
திருஞானசம்பந்தர் தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களையும் தரிசித்து வழிபடவும் ஆங்காங்குள்ள மக்கட்கு அவற்றின் பெருமைகளை அறிவுறுத்தவும் விரும்பி மிகப்பெரிய தமது ஐந்தாவது தல யாத்திரையை மேற்கொள்ள எண்ணினார். தன் தந்தையாரிடம் அவ் விருப்பத்தைத் தெரிவித்தார். சிவபாதஇருதயர் தமது அருமருந்தன்ன பிள்ளையைப் பிரிய மனமின்றி யான் உம்மைப் பிரிந்து ஒருகணமும் தரியேன் ஆயினும், இருமை யின்பம் அளிக்கும் யாகம் ஒன்றையும் செய்ய எண்ணுகிறேன். எனவே, சில தலங்கட்கு உம்மோடு வருகிறேன், என்று கூறி விடையளித்துத் தானும் அவரோடு உடன் சென்றார்.
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்குவேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந்தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச்சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கியருளுமாறு இறைவனை வேண்டி, `துணிவளர்திங்கள்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்.

பனி நோய் தீர்த்தல்:
பாச்சிலாச்சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி `அவ்வினைக்கு இவ்வினை` என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கேயன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.

முத்துப் பந்தர் பெற்றது:
திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக் கூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக் கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்தார். அப்போது இளவேனிற் பருவம் தொடங்கியது. திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகற்போதில் பட்டீச்சுரம் வந்தடைந்தார். சிவபூதங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு `இது சிவபெருமான் அளித்தது` எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை வியந்தவாறு `பாடல் மறை` பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார்.

உலவாக் கிழி பெறுதல்:
ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் `இடரினும் தளரினும்` என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து `இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார்` எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார்.

யாழ்மூரி பாடியது:
பின்னர் ஞானசம்பந்தர் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் சென்றடைந்தார். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர், ஆதலின் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாணரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர். பாணர், தம் உறவினர்களோடு உரையாடுகையில், அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசையைப்பாணர் உடனிருந்து யாழில் வாசித்து வருதலினாலேயே திருப்பதிக இசை சிறப்படைகிறது என முகமன் உரை கூறினர். அதைக் கேட்டு மனம் பொறாது ஞானசம்பந்தரை வணங்கித் திருப்பதிக இசை யாழில் அடங்காதது என்பதனை உறவினர்கள் உணருமாறு செய்தருள வேண்டுமெனப் பணிந்தார். ஞானசம்பந்தர் கண்டத்திலும் கருவியிலும் அடங்காத இசைக் கூறுடைய `மாதர் மடப்பிடி` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து `போகமார்த்த பூண் முலையாள்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.

நீலநக்கர் சிறுத் தொண்டர் உபசரிப்பு:
நீலநக்கநாயனார் ஞானசம்பந்தரை எதிர்கொண்டழைத்துத் தம் திருமனையில் திருவமுதளித்து உபசரித்தார். திருச்சாத்த மங்கையில் அயவந்தி என்னும் ஆலயத்திலுள்ள இறைவனை வழிபட்டார். அத்தலத் திருப்பதிகத்தில் நீலநக்கரின் அன்பின் திறத்தைப் பாராட்டினார். பின்னர்ப் பல பதிகளையும் வழிபட்டுத் திருச்செங்காட்டங்குடியை அடைந்தார்.
திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சுரம் சென்று `பைங் கோட்டு மலர்ப் புன்னை` எனத் தொடங்கிப் பதிகம் பாடிப் பரவினார். அத்திருப்பதிகத்தில் சிறுத்தொண்டர் பக்திச் சிறப்பைப் பாராட்டித் திருமருகல் சென்றடைந்தார்.

விடந் தீர்த்தல்:
திருஞானசம்பந்தர் மருகற் பெருமானை வழிபட்டுச் சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். அப்பொழுது ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது.
வணிகன் ஒருவன் தனக்கு முறைப் பெண்ணான கன்னி ஒருத்தியை உடன் அழைத்துக் கொண்டு தன்னூர் செல்பவன், மாலை நேரம் வந்ததால் தன் பயணத்தைத் தொடர முடியாமல் திருமருகல் கோயில் அயலிலுள்ள ஒரு திருமடத்தில் தங்கினான். இரவில் வணிகனை அரவு தீண்டி விட்டது. விடந் தலைக்கேறி மயங்கிச்சோர்ந் தான். அந்நிலையில் அவனுடன் வந்த பெண் மணமாகாத நிலையில் அவனைத் தொட இயலாதவளாய்ப் பெற்றோர்க்குத் தெரியாமல் உடன் போக்காக வந்தவளாதலின் செய்வதறியாது திகைப்புற்று அழுது அரற்றினாள். ஊர்மக்கள் மந்திரம் வல்லாரைக் கொண்டு மந்திரித்தும் பயனின்றிக் கிடந்த வணிகனின் உடல் அருகே இருந்து கதறி அழும் பெண் `நஞ்சுண்டு தேவர்களைக் காத்த பெருமானே, மன்மதன் உயிரை அவன் மனைவி வேண்ட அளித்தருளிய கருணை யாளனே மார்க்கண்டேயர்க்காக காலனை உயிர்துறக்கச் செய்தருளியவனே என் நாயகனைப் பற்றிய விடவேகம் தணியுமாறும், துன்பக் குழியிலிருந்து நான் கரையேறுமாறும் அருள் புரிய வேண்டும்` என இறைவனை நினைந்து அழுதரற்றினாள். அவ்வழியில் காலை இளம் போதில் மருகற் பெருமானை வழிபட வந்த திருஞானசம்பந்தப் பெருமானின் திருச்செவிகளுக்கு இவ்அவலக் குரல் எட்டியது. உடன் ஞானசம்பந்தர் அத்திருமடத்தை அடைந்து அவளுக்கு ஆறுதல் கூறி நடந்ததை வினாவினார். அப்பெண் ஞானசம்பந்தரை வீழ்ந்து வணங்கித் தன் வரலாற்றைச் சொல்லலானாள்.
`வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொருளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து `உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ` என முறையிடும் நிலையில் `சடையாயெனுமால்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருஞானசம்பந்தர் திருமருகலில் தங்கியிருந்தபோது, சிறுத் தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். மருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து `அங்கமும் வேதமும்` என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத் தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச்சுரத்தை வழிபட்டுக் கொண்டு சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். பின்னர் சிறுத்தொண்டருக்கு விடையருளித் திருப்புகலூர் தொழச் சென்றார்.

முருக நாயனார் உபசரிப்பு:
முருக நாயனார் எதிர் கொண்டழைக்கத் திருப்புகலூர் சென்ற ஆளுடைய பிள்ளையார் ஆலயம் சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிப் போற்றி முருக நாயனார் திருமடத்தில் தங்கி யிருந்தார். திருநாவுக்கரசர் திருவாரூரில் புற்றிடங் கொண்ட பெரு மானை வழிபாடாற்றித் திருப்புகலூரை வழிபட எழுந்தருளினார். அப்பர் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் அவரை எதிர்கொண்டழைத்து அளவளாவி மகிழ்ந்தார். அப்பர் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை நாளின் சிறப்பை விரித்துரைக்கக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரைத் திருப்புகலூரில் இருக்கச் செய்து விற்குடி வீரட்டத்தைப் பணிந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த நகர மக்கள் எதிர்கொண்டு போற்றினர். ஞான சம்பந்தர் திருவாரூர்ப் பூங்கோயிலை அடைந்து `சித்தம் தெளிவீர்காள்` என்பது முதலிய பல திருப்பதிகங்களை அருளிப் பரவி வழிபட்டார். அரனெறியைத் தரிசித்தார். பின்னர் வலிவலம் கோளிலி முதலான தலங்களை அடைந்து வழிபட்டு மீண்டும் திருவாரூரை அடைந்து தங்கியிருந்து வழிபட்டு அத்தலத்தைப் பிரிய மனம் இன்றி அப்பர் நினைவால் திருப்புகலூருக்கு எழுந்தருளினார். வழியிடையே பனையூரைத் தொழுது திருப்புகலூர் வந்தடைந்தார். ஊர் எல்லையில் முருக நாயனார் முதலிய அடியவர்கள் வரவேற்கத் திருப்புகலூரை அடைந்து இறைவனை வழிபட்டு முருகநாயனார் திருமடத்தில் திருநாவுக்கரசர், நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியவர்களோடு உரையாடிக் கலந்து மகிழ்ந்து உடனுறைந்தார்.

திருநாவுக்கரசருடன் தலயாத்திரை:
ஞானசம்பந்தரும் அப்பரும் நீலநக்கர் சிறுத்தொண்டர் முதலானோர்க்கு விடையளித்து இறைவன் வீற்றிருக்கும் பல திருத் தலங்களையும் வழிபட விரும்பிப் புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அப்பர் உடன்வருவதால், முத்துச்சிவிகை பின்வர, தானும் அவருடன் நடந்து சென்றார். அதைக்கண்ட அப்பர் பெருமான் தாங்கள் சிவிகையில் எழுந்தருள்வீராக எனக் கேட்டுக் கொள்ள ஞானசம்பந்தர் அப்பரை முன்னே விடுத்து அவர் செல்லும் திருத்தலங்களைத் தொடர்ந்து சென்று வழிபட்டார். இருவரும் அம்பர் மாகாளத்தை வணங்கித் திருக்கடவூர் சென்றனர். குங்குலியக்கலயர் வரவேற்க இருவரும் கடவூர் வீரட்டத்தைத் தொழுது போற்றி அந்நாயனார் திருமனையில் அமுது கொண்டு திருக்கடவூர் மயானம் ஆக்கூர் மீயச்சூர் பாம்புரம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவீழிமிழலைவந்தடைந்தனர். அத்தலத்தில் விண்ணிழி விமானத் தில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கி இருவரும் தனித்தனி ஆலயத்தின் அருகே விளங்கிய இரண்டு திருமடங்களில் தனித்தனியே அடியார்களுடன் தங்கினர்.
கோயிலின் வடபால் உள்ள திருமடத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தார். அங்கிருக்கும் நாள்களில் திலதைப்பதி, பேணு பெருந்துறை என்ற தலங்களை ஞானசம்பந்தர் வழிபட்டுப் போற்றினார். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது எங்களோடு சீகாழிக்கு வந்தருள வேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி அன்றிரவு துயில் கொண்டார். பெருமான் அவர் தம் கனவில் தோன்றி `யாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை நீ வீழிமிழலையிலேயே காணலாம்` எனக் கூறக் கேட்டு விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது இறைவன் காழிக் காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக் கண்டு `மைம் மருபூங் குழல்` எனத் திருப்பதிகம் பாடிப் பரவினார், காழிமக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.

வாசி தீரக் காசு பெறுதல்:
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற்றனர். அதனை அறிந்த பிள்ளையார் `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.

மறைக்கதவம் அடைத்தல்:
ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழி மிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு போற்றத் திருமறைக் காடு அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகினார் கள். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக் கதவுகள் திறக்கப்படாதிருத்தலையும் மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருதலையும் கண்ட ஞான சம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டுமெனத் திருவுளத்தெண்ணி அப்பரைப் பார்த்து `இக்கதவுகள் திறக்கத் தாங்கள் திருப்பதிகம் பாடியருளுக` என வேண்டினார். அப்பர் `பண்ணினேர் மொழியாள்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார்.
ஞானசம்பந்தர் `சதுரம் மறை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர்.

வாய்மூரில் இறைவன் ஆடல் காட்டி அருளல்:
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி `நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக` என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலை யில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார்.
ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் `தளிரிள வளரென` எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.

மதுரைப் பயணம்:
அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. ஆனைமலை முதலிய மலைகளைத் தம் இருப்பிடங்களாகக் கொண்ட சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து ஒழுகிய காரணத்தால் மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர்.
பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தரும் அப்பரும் மறைக்காட்டீசன் திருக்கோயில் சென்று வணங்கினர். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் `பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது?` எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி `நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது` எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க `வேயுறு தோளிபங்கன்` என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். தம்மோடு உடன் வரமுற்பட்ட அப்பரடி களைத் தடுத்து நிறுத்திச் சோழ நாட்டில் இறைவனைத் தொழுது இருப்பீர்களாக எனக் கூறித் தமது மதுரைப் பயணத்தைத் தொடர்ந் தார்.

அமைச்சர் வரவேற்பு:
திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் ஏறிப் புறப்பட்டு அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றம் பணிந்து மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறையாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகை யிலிருந்து இறங்கி `அரசியார்க்கும் அமைச்சர்க்கும் திருவருளால் நன்மைகள் விளைக` என வாழ்த்தினார். குலச்சிறையார் `இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையோம். இனி எங்கள் நாட்டில் திருநீற்றொளி விளங்குவது உறுதி` என முகமனுரை கூறி, மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதைத் தெரிவித்தார். மேலும் மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் `மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது` எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி `அதுவே திருவால வாய்` எனக் கூறக்கேட்டு `மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து 'மங்கையர்க்கரசி வளவர் கோன்'எனத் தொடங்கும் திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறை யாருடன் வலங்கொண்டு பணிந்து `நீலமாமிடற்று` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.

மங்கையர்க்கரசியார் சந்திப்பு:
ஆலவாய் இறைவர் திருக்கோயிலை வழிபட வந்த மங்கை யர்க்கரசியார் வழிபாடு முடித்துக் கோயில் முன்றிலில் திருஞான சம்பந்தரைக் கண்டு அவர் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து பணிந்தார். பிள்ளையார் எழுதரிய மலர்க்கரங்களால் அவரை எடுத்தார். `யானும் என் நாயகனும் செய்த தவப்பயனால் தங்களைத் தரிசிக்கும் பேறு பெற்றேன்` எனக் கூற ஞானசம்பந்தர் `புறச் சமயச் சூழலுள்ளும் சிவ னடித் தொண்டினை மறவாது போற்றும் உம்மைக் காணும் பொருட்டே இங்குவந்தோம்` எனக்கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பித் திருக்கோயில் புறத்தணைந்து குலச்சிறையார் காட்டிய திருமடம் ஒன் றில் அடியவர்களோடு எழுந்தருளியிருந்தார். அரச மாதேவியாரின் கட்டளைப்படி குலச்சிறையார் அடியார்களுக்கு நல்விருந்தளித்து உபசரித்தார்.

திருமடத்திற்குத் தீ வைத்தல்:
பகற்பொழுது கழிந்து இரவு வந்தது. ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர்.
சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். `இத்தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக` என்று கூறி `செய்யனே திரு` என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
பொழுது விடிந்தது. ஞானசம்பந்தர் திருமடத்தில் சமணர்கள் தீவைத்த செய்தி மதுரை மாநகர் முழுதும் பரவியது. அதனைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மிகவும் மன நடுக்கம் உற்றனர். இக்கொடியோர் வாழும் நாட்டில் ஞானசம்பந்தரை வரவழைத்த குற்றத்துக்கு நாம் இறப்பதே சரியான தண்டனை என்று எண்ணினர். திருமடத்திலிடப்பட்ட தீயால் யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாமை கருதி ஆறுதல் உற்றனர். இந்நிலையில் பாண்டி மன்னனை வெப்பு நோய் பற்றி வருத்தியதறிந்து உளம் நடுங்கி மன்னனை அடைந்தார்கள். மருத்துவர்களாலும் சமண முனிவர்களாலும் நோயைக் குணப்படுத்த இயலவில்லை..
இந்நிலையில் குலச்சிறையார் அரசனை அணுகி `ஞானசம்பந்தர் திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளது. அவர் வந்தால் நோய் தீரலாம்` என்றார். மன்னன் ஞானசம்பந்தர் என்ற நாம மந்திரத்தைக் கேட்ட அளவில் அயர்வு நீங்கியதை உணர்ந்து `அவரை அழைப்பீராக` என்று கூறினான். சமணர்கள் அரசனிடம் இந்நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் நடுநிலை பிறழேன் என மறுத்தான். குலச்சிறை யாரும் அரசியாரும் ஞானசம்பந்தரைச் சென்று தரிசித்துத் திருமடத் திற்குத் தீயிட்ட செயலுக்கு மிக வருந்தியவர்களாய் மன்னன் வெப்பு நோயால் வாடுவதை விண்ணப்பித்துத் `தாங்கள் எழுந்தருளி நோயைக் குணப்படுத்தினால் உய்வோம்` எனக் கூறி நின்றனர். ஞான சம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று `தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம்` எனக் கூறிப் புறப்பட்டுத் திருக் கோயிலை அடைந்து `காட்டு மாவது உரித்து` என்ற திருப்பதிகத்தால் போற்றி இறைவன் திருவுளக் குறிப்பை அறிந்தார். மேலும் சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க `வேத வேள்வியை` என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.

வெப்பு நோய் தவிர்த்தல்:
சம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் `நுமது ஊர் எது` எனக் கேட்கப் `பிரமனூர்` என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார். சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி `உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள்` எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி `மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம்` என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து `அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம்` என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு` என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து `யான் உய்ந்தேன்` என்று போற்றினான்.

அனல் வாதம்:
பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்ல லாம் என்று எண்ணினார்கள். திருஞானசம்பந்தர் `இனி உங்கள் வாய்மையைக் கூறுங்கள்` என்றார். சமணர்கள் `இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான்.
ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். `போகமார்த்த பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் நள்ளாற்றிறைவனைப் போற்றி அவ் ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம் அனலிடை வேகாதிருக்க வேண்டி `தளிரிள வள ரொளி` என்றதொரு திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது.சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப்பெறுவதாயிற்று.

புனல்வாதம்:
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி `ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்` என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான்.
ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் `அஸ்தி நாஸ்தி` என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் `வாழ்க அந்தணர்` என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன் ஆயினான். குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் `வன்னியும் மத்தமும்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ்வேடு வைகையின் வடகரையிலமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் ஏடகம் எனப் பெற்றது. குலச் சிறையார் அதனை எடுத்து வந்து ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார்.
சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். ஞானசம்பந்தர் பாண்டியமன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று `வீடலால வாயிலாய்` என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.

பாண்டித் தலங்களைத் தரிசித்தல்:
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் `மண்ணில் நல்ல வண்ணம்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். பாண்டியனும் மங்கையர்க்கரசி யாரும் குலச்சிறையாரும் உடன் வர திருப்புத்தூர், கானப்பேர், சுழியல், குற்றாலம், நெல்வேலி முதலிய தலங்களை வழிபட்டு இராமேச்சுரம் சென்றடைந்தார். திருமால் இராமாவதாரத்தில் தாபித்து வழிபட்ட இராமநாதரைத் தரிசித்து அங்கிருந்தபடியே ஈழத்தலங்களாகிய திருக்கேதீச்சரம், திருக்கோணமலை ஆகிய தலங்களை நினைந்து போற்றினார்.

சோழ நாடு மீளல்:
இராமேச்சுரத்திலிருந்து ஆடானை, புனல்வாயில், மணமேற் குடி ஆகியவற்றை வழிபட்டுப் பாண்டிய மன்னன் அரசியார் அமைச்சர் முதலானோர்க்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுச் சோழநாடு புகுந்து பாதாளீச்சரம், திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு திருக்கொள்ளம்பூதூர் வந்தடைந்தார்.

ஓடம் உய்த்தது:
கொள்ளம்பூதூர் எல்லையில் முள்ளியாறு வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடம் செலுத்துவோர் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக் கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றிக் `கொட்டமே கமழும்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். ஓடம் தானே மறுகரைக்கு ஞானசம்பந்தரை அழைத்துச் சென்றது. ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால் இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய நள்ளாற்றிறைவன் மீது `பாடகமெல்லடி` என்ற பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

புத்தரை வாதில் வென்றது:
திருத்தெளிச்சேரியை அடைந்து வழிபட்டுப் போதி மங்கை அருகே ஞானசம்பந்தர் வரும்போது, அவரது முத்துச் சின்னம், காளம், `பரசமயகோளரி வந்தான் பாலறாவாயன் வந்தான்` என முழங்கிய ஓசை கேட்ட புத்த நந்தி, தேரர் குழாத்துடன் வந்து தங்களோடு வாதிட அழைத்தான். ஞானசம்பந்தருடன் வந்த அடியவர் ஒருவர் அவர் அருளிய தேவாரங்களில் `புத்தர் சமண்கழுக் கையர்` என்ற பாடலைப் பாடி `புத்தன் தலை இடி வீழ்ந்து உருளுக` என உரைத்த அளவில் புத்த நந்தியின் மேல் இடி வீழ்ந்தது. உடன் தேரர்கள் அஞ்சி அகன்றனர். சாரி புத்தன் என்பான் தர்க்க வாதம்புரியுமாறு ஞானசம்பந்தரை அழைத்த போது அந்த அடியவரைக் கொண்டே வாதிடச் செய்து வெற்றி கண்டார். புத்தர்கள் தங்கள் பிழை உணர்ந்து ஞானசம்பந்தரை வணங்கிச் சைவரானார்கள். பின்னர்த் திருக்கடவூர் சென்று வழிபட்டு அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்.

அப்பரைக் கண்டு மகிழ்தல்:
ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வருவாராயினார்.
திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்த போது அப்பர் வரவைக் காணாது `அப்பர் எங்குற்றார்?` என அடியவர் களை வினாவினார். அவ்வுரை கேட்ட அப்பர் `உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்` என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையினின் றிறங்கி `இவ்வாறு செய்தருள்வது தகுமா?` எனக் கூறி அப்பரை வணங்கினார். அப்பரும் உடன் வணங்கினார். பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர். ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பாண்டி நாட்டில் நடந்தவைகளை விவரித்தார். அப்பர் `திருநெறித் தொண்டெனும் வான்பயிர் தழைக்கச்சூழும் பெருவேலி ஆயினீர்` எனப் போற்றினார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியதை அறிந்த அப்பர்அந்நாடுசெல்லும் விருப்புடையவ ரானார். அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக்கேட்ட ஞான சம்பந்தர் தொண்டை நாடு செல்லும் விருப்புடையரானார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து யாத்திரை மேற்கொண்டனர்.
ஞானசம்பந்தர் காவிரி வடகரையை அடைந்து நெய்த்தானம் ஐயாறு பழனம் முதலிய தலங்களை வணங்கி, சீகாழிப் பதியை அடைந்து தோணிபுரப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார்.

தொண்டைநாட்டுத் தல யாத்திரை:
ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் கருத்தினராய்ச் சீகாழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து மாணிகுழி, பாதிரிப் புலியூர், வடுகூர், வக்கரை இரும்பை மாகாளம் முதலிய தலங்களை வணங்கித் திருவதிகை வீரட்டம் தொழுது போற்றிக் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனை வணங்கிப் பதிகங்கள் பாடி திருஓத்தூர் அடைந்து இறைவனைப் போற்றினார். சிவனடியார் ஒருவர் அடியவர்க்கெனத் தான் வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனைகளாக இருத்தலையும் சமணர்கள் சிலர் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞான சம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, `பூத்தேர்ந்தாயன` என்னும் பதிகம் பாடிய அளவில் ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றன. அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழைபொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.
திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம் , காம கோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங் களைப் போற்றிக் காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங் காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து `துஞ்சவருவாரும்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அவ்வூரை விட்டகன்று பாசூர் வெண்பாக்கம் காரிகரை ஆகிய தலங்களை வணங்கிக் கொண்டு காளத்தியை அடைந்தார். கண்ணப்பரின் பக்தித் திறம் போற்றிக் காளத்தி இறைவரைப் பணிந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் பலநாள் தங்கிப் பரவினார். அங்கிருந்தே வடதிசையிலுள்ள கயிலாயம், கேதாரம், திருப்பருப்பதம் முதலிய தலங்களைப் போற்றிப் பதிகங்கள் அருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவேற்காடு பணிந்து திருவொற்றியூரை வந்தடைந்தார்.

எலும்பைப் பெண்ணாக்கியது:
 மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு `என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்?` என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலையில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர்.
ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து `மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக` எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப்பதிகமாகிய `மட்டிட்ட புன்னை` எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார்.
ஞானசம்பந்தர் மறை நெறி மரபை அவருக்கு உணர்த்தியதோடு பூம்பாவையை யாம் மீண்டும் உயிர்ப்பித்தோம் ஆதலின் அவள் எமக்கு மகளாவாள் எனக்கூறிய அளவில் சிவநேசர் மனத் தெளிவுற்று அப்பெண்ணை வேறொருவர்க்கு மணம் முடிக்க மனமின்றிக் கன்னிமாடத்தே இருக்கச்செய்தார். பின்னர் பூம்பாவையும் சிவன் அருளையே சிந்தித்துச் சிவனடி கூடினார்.
பின்னர் ஞானசம்பந்தர் மயிலாப்பூரினின்றும் புறப்பட்டுத் திருவான்மியூர், இடைச்சுரம், திருக்கழுக்குன்றம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலம் உடையானைப் போற்றிச் சீகாழிக்கு எழுந்தருளிப் பிரமபுரத்துப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார். இது ஞானசம்பந்தரின் ஆறாவது தல யாத்திரையாகும்.

திருமணம்:
ஞானசம்பந்தரைக்காணும் பெருவேட்கையில் முருக நாயனாரும் நீலநக்க நாயனாரும் சீகாழி வந்தனர். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர் புண்ணியப் பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒருகன்னியைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தார். ஆயினும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார்.
சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி `யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன்` என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது `விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே` என்னும் நினைவினராய்` `இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம்` என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காணவந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார்.
அச்சோதி மறைய பெருமணக்கோயில் முன்போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

காலம்:
திருஞானசம்பந்தர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி யில் தமிழகத்தே வாழ்ந்த திருவருட்செல்வராவார் என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஒப்ப முடிந்த உண்மையாகும்.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பது அவர் தம் வரலாறுகளால் நன்கினிது விளங்கும். திருநாவுக் கரசர் காலத்தில் குணபரன் என்ற சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன் மகேந்திர வர்மன் ஆவான். இவன் காலம் கி.பி. 600 முதல் 630 வரை ஆகும். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் களில் சிறுத் தொண்டர் என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின் புதல்வனான நரசிம்ம வர்மப் பல்லவன் காலத்தில் படைத்தளபதி யாயிருந்து சாளுக்கியரோடு வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி கண்டவர். அதன் பின்னரே அவர் திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன் வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி. 642 ஆகும்.
திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனாக விளங்கிய இம்மன்னன் காலம் கி.பி. 640 - 670. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு எண்ணுங் கால் திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம் இன்றித் துணியலாம்.

திருஞானசம்பந்தர் துதி:
பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த
புரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை
விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.

ஞானசம்பந்தர் வரலாறு சுருக்கம்:
திருஞானசம்பந்தர் சீகாழியில் சிவபாதவிருதயர்க்கும் பகவதிக்கும் கௌணிய கோத்திர சிகாமணியாய்த் தோன்றியவர். மூன்றாவது வயதில், திருக்குளக்கரையில், திருத்தோணியப்பர் அம்மையுடன் எழுந்தருளி நல்கிய ஞானப்பால் உண்டதால் திருஞானசம்பந்தர் ஆனார். `தோடுடைய செவியன்` எனத் தொடங்கிய திருப்பதிகம் பாடிச் சுட்டுதற்கு எட்டாத கடவுளைச் சுட்டிக் காட்டினார். திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றார். பல தலங்களை அடைந்து தரிசித்துப் பாடியுள்ளார். திருநீலகண்டப் பெரும்பாணர்க்குத் தம் அருட்பாக்களை யாழில் அமைத்து இசைக்கும் வரங்கொடுத்தவர். திருநெல்வாயில் அரத்துறையில் முத்துப்பல்லக்கு, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் பெற்றார். உபநயனம் புரியுங்கால், ஓதியுணர்ந்த அந்தணர்க்கு ஓதாதுணர்ந்த நம் பெருமானார் ஐயம்திரிபகற்றி, ஐந்தெழுத்தின் பெருமையெல்லாம் உபதேசித் தருளினார்.
திருநாவுக்கரசரொடு கூடியிருந்தார். அவருக்கு `அப்பர்` என்ற திருப்பெயர் உண்டானது, இவர் அழைத்ததால்தான். திருப்பாச் சிலாச்சிராமத்தில் கொல்லிமழவன் புதல்வியைப் பற்றிய முயலகன் என்னும் நோயை நீக்கினார். திருக்கொடி மாடச்செங்குன்றூரில் நச்சுக்காய்ச்சலைத் தவிர்த்து அடியரைக் காத்தார். திருப்பட்டீச்சரத்தில் முத்துப்பந்தரைப் பெற்றார். திருவாவடுதுறையில் உலவாக்கிழியாக ஆயிரம் பொன் பெற்றார். திருத்தருமபுரத்தில் யாழ்மூரிப் பதிகம் பாடி, அருட்பாடல் கருவியில் அடங்காத சிறப்பைப் புலப்படுத்தினார்.
திருமருகலில், பாம்புகடித்திறந்த வணிகனை உயிர்த்தெழச் செய்து, பெருவாழ்வுநல்கி, அவனையே நம்பியிருந்த திக்கில்லாத வளுக்குத் தெய்வத்துணையானார். திருச்செங்காட்டங் குடியையும், திருப்புகலூரையும் தரிசித்தார். சிறுத்தொண்டர், முருகர் முதலிய நாயனாரைச் சிறப்பித்துப் பாடினார். அங்கும் அப்பரைக் கூடினார். திருவாரூர்த் திருவாதிரைச் சிறப்புரைத்தார். திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றுப் பஞ்சத்தை ஒழித்தார். திருமறைக்காட்டில் அப்பருடன் கூடி, பாடித் திருக்கதவைத் திறந்து மூடுஞ் சீருடைய தாக்கினார். திருமதுரை சென்று, மங்கையர்க்கரசியாரையும் குலச் சிறையாரையும் சிறப்பித்தார். அரசன் வெப்பு நீங்கித் தப்பும்படி திரு நீற்றுப் பதிகத்தை அருளினார். அங்கு, தம் மடத்தில் இட்ட தீயை அரசனுக்கு வெப்புநோயாக்கினார். தீயில் இட்ட ஏட்டைப் பச்சை யாகக் காட்டினார். நீரிலிட்ட ஏடு எதிரேறிச்செல்லும் பாட்டினார் ஆனார். சைவர்மடத்தில் தீவைத்த காரணத்தால் கழுவேறியவர்களை விலக்காதிருந்தார். `வேந்தனும் ஓங்குக` என்று வாழ்த்திப் பாண்டியன் கூன் நிமிரச் செய்தார். பாண்டிநாடு, புறச்சமய இருளின் நீங்கித் திரு நீற்றொளியொடு விளங்கித் திருநெறியில் ஒழுகிற்று.
திருக்கொள்ளம்பூதூரில் ஓடம்போக்கினார். போதிமங்கை யில் எதிர்த்த புத்தநந்தியின் தலைமேல் இடிவிழ வைத்த நந்தி யாயினார். சிவிகையைத் தாங்கிய அப்பரைப்போற்றிச் சின்னாள் திருப்பூந்துருத்தியில் இருந்தார். ஒருவரையொருவர் உசாவிப் பாண்டிநாடு தொண்டைநாடுகளில் தரிசன விசேடங்களை அறிந்தனர். திருவோத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கினார். திரு மயிலாப்பூரில், தமக்கென்றிருந்து பாம்பு கடித்திறந்த பூம்பாவையின் எலும்பைக்கொண்டு, திருப்பதிகம்பாடி, உயிருடைய உருவமாக்கி யருளினார்; வீட்டையும் காட்டினார். திருநல்லூர்ப் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பிகள் திருமகளை மணம்புரியுங்கால், இவளொடும் சிவனடி சேர்வன் என்று திருக்கோயிலை உற்றுத் திருப்பதிகம் பாடி னார். திருமணம் காணவந்தார் எல்லாரும் அருள் மணம் புரிந்து அழியா இன்பம் அடைகின்றனர். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடிய திருவைந்தெழுத்தின் பெருமையே எல்லா நலங்களுக்கும் காரணம்.
திருச்சிற்றம்பலம்